Subscribe:

Ads 468x60px

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

தாய்ப்பால் வாரம்


'தாய்ப்பால் வாரம் அல்ல அல்ல தாய்ப்பால் வரம்'

உலக தாய்ப்பால் வாரம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்பட்டது. தாய்ப்பால் அளிப்பது வரம். அதற்குக் கொடுப்பினை வேண்டும். எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்தப் பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப் படுத்துகின்றனர்.
ஒரு பெண் தாய்மை அடையும்போது இயற்கையாகவே அப்பெண்ணின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. கருவான குழந்தையைத் தட்ப வெப்ப சூழ் நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு உதவியாகக் கருவரை என்னும் கருப்பையில் அக் குழந்தையைக்கு தேவையான காற்று, நீர், மற்றும் அதற்குத் தேவையான உணவு, அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாகச் செலுத்தப்படும். அருமையான ஏற்பாடுகள், அனைத்தும் இயற்கையாக ஏற்படுத்தப் பட்டு, அக்குழந்தை சரியான வளர்ச்சி அடைந்தவுடன் வெளியேற்ற அப் பெண்களின் இடுப்புப் பகுதியில் இருக்கும் பெல்விஸ் தானாக விரிவடைந்து மீண்டும் சுருங்கும் வகையில் அமைகிறது.
அப்படிப் பிறந்த குழந்தைக்கு இந்த உலகில் வந்தவுடன் உணவுப் பொருளாக தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது. அந்தத் தாய்ப்பாலில் அக் குழந்தைக்குத் தேவையான அத்துணை மூலப்பொருட்களும் தாய் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து கிரகிக்கப்பட்டு அக்குழந்தையை அடைகிறது.
தாய் குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பாலில் அக் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கப் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் தாயின் மார்பகத்தில் ஊறி இயற்கையாகவே கலக்கப்பட்டு குழந்தைக்கு அளிக்கப்படுகிறது.
உலகத்தில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கிறார்கள், தாய்ப்பாலைவிடச் சிறந்த நோய்தடுப்புச் சாதனம் வேறு எதுவுமே இல்லை என்று. அப்படிப்பட்ட தாய்ப்பாலைத் தான் பெற்ற குழந்தைக்கே ஊட்டத் தயங்கும் தாய்மார்கள் தங்களின் அழகு கெட்டுவிடும் என்று நினைத்துத் தாய்ப்பால் ஊட்ட மறுக்கிறார்கள். உண்மையில் தாய்ப்பால் அளிப்பதால் பெண்களின் அழகு கூடுகிறதே தவிர குறைவதில்லை. இதைப் பல பெரியவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தாய்ப்பால் கொடுப்பதால் ஒவ்வொரு தாயும் தாய்ப்பாலுடன் சேர்த்துத் தன்னுடைய பாசத்தையும் அன்பையும், கருணையையும், கலந்து ஊட்டுகிறாள். அப்படிப்பட்ட தாய்ப்பாலை ஊட்டத் தவறிய பெண்கள் பிற்காலத்தில் எப்படி அந்தக் குழந்தையிடமிருந்து பாசம், நேசம், அன்பு, கருணை போன்றவற்றை எதிர்பார்க்க முடியும்?
ஆகவே தாய்மார்கள் தங்களுடைய தவறான எண்ணங்களைக் கைவிட்டு தாய்ப்பாலுடன் பாசத்தையும், நேசத்தையும், அன்பையும், கருணையையும் சேர்த்து தாய்ப்பாலூட்டி, இந்த தேசத்துக்கு ஒரு நல்ல ப்ரஜையை அளிக்க வேண்டும்.
யார் கண்டது, நீங்கள் தாய்ப்பால் அளித்து நல்லபடியாக வளர்க்கும் உங்கள் குழந்தை நாளை ஒரு விஞ்ஞானியாகவோ, முதல் அமைச்சராகவோ நம் தேசத்தைக் காப்பாற்றும் ஒரு பெரிய மனிதராகவோ வர பலமான, ப்ரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன.
மிகச்சிறந்த கதாநாயகி அன்னைதான், என்னை என் அன்னைதான் உருவாக்கினார்கள்.
- தாமஸ் எடிசன்
தேவதை போன்ற என் அன்னைக்கு நான் கடமைப் பட்டுள்ளேன்
- ஆப்ரகாம் லிங்கன்
நான் சாதித்திருக்கிறேன் என்றால் அதற்கு என் அன்னைதான் காரணம்
-புகழ் பெற்ற மத போதகர் டிவைட்மோடி
ஒரு நல்ல தாய் இருந்தால் அவளால் எல்லோரும் புனிதமடைகிறார்கள்
- ஜீன்பால் ரிட்சர்
என் தாயின் முத்தம் என்னை ஓவியனாக்கியது
- பெஞ்சிமின் வெஸ்ட்
கின்னஸ் பதிவில் முதலிடம் பிடிக்கக் கூடிய, யாராலும் முந்த முடியாத பல மேதைகளையும், நிர்வாகிகளையும், திறமைசாலிகளையும் உருவாக்கியவள் தாய். உலகிலேயே பெரியதாய், இனியதாய், அரியதாய், நல்லதாய் ஒன்று உண்டென்றால் அவள்தான் "நல்ல தாய்". தாய்ப்பாலைக் கருணையோடு குழவியின் பசியறிந்தூட்டும் தாய் அவள்தான் "நல்ல தாய்".
அதனால்தான் இறைவனே கர்ப வாசத்தின் பெருமை அறிய கிருஷ்ணனாக அவதரித்தான் என்று சொல்லுவர்.
ஆண்பால், பெண்பால், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் ஆயிரம் இருப்பினும் அத்துணப் பால்களையும் உள்ளடக்கிய தாய்ப்பால் மிகச் சிறந்தது. அதைவிட உலகில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளிக்கக்கூடிய செல்வம் வேறெதுவும் இல்லை.
கொண்டாடுவோம் தாய்பால் வாரம், ஏனென்றால் தாய்ப்பாலே "வரம்".

0 கருத்துகள்:

கருத்துரையிடுக